ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா - ஸ்ரீல ஸ்ரீ நாகபூதப் பெருமாள்

ஸ்ரீ மங்கலமுடையார் சாஸ்தா - ஸ்ரீல ஸ்ரீ நாகபூதப் பெருமாள் தல வரலாறு

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மங்கலமுடையார்
சாஸ்தா காயத்ரீ
ஓம் பூதநாதாய வித்மஹே
பவபுத்ராயதீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா,
சூரங்குடி கிராமத்தில் ஊருக்கு வெளிப்பக்கம் குளத்துக்கரையில் உள்ள
அருள்மிகு ஸ்ரீல ஸ்ரீ மங்கலமுடையார் மற்றும் ஸ்ரீல ஸ்ரீ நாகபூதத்தார்
ஆகிய இரு தெய்வங்களும் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்ற சிறிய திருக்கோவிலின் வரலாறு இந்த கோவில் நிறுவப்பட்ட இடத்தை. சூரங்குடி கிராமத்தில் வசித்து வந்த சிவ பக்தனும், வேளாளருமாகிய கிராமத்துப் பண்ணையார் உயர் தெய்வத்திரு. ஆ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தங்கள் சொந்த நிலங்களில், கிராமத்துக் குளத்தங்கரை ஓரமாக உள்ள நல் நிலங்களில் ஒரு பகுதியை நன்கொடையாக மனமுவந்து எழுதிக்கொடுத்து உதவினார்கள். அன்றியும் திருக்கோவிலுக்கு வேண்டிய தண்ணீர் வசதிக்காக ஒரு கிணறு வெட்டவும் ஏற்பாடு செய்து தந்தார்கள் திருக்குறுங்குடி கிராமத்திலிருந்து ஒரு ஆச்சாரியாரை வரவழைத்து அவருக்கு இரு வருடத்திற்குள்ள கோவில் பூஜை செய்வதற்கு நெல்லை ஊதியமாக கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்கள். அன்றியும் கோவில் பூசையை நடத்திவரும் அர்ச்சகருக்குக் குடியிருக்க, கிராமத்தில் வீடு கட்டிக் கொடுத்து உதவினார்கள். அர்ச்சகர் குடும்பத்தில் பட்டவர்கள் அதே இடத்தில் பரம்பரை, பரம்பரையாக இன்றும் வசித்து வருகிறார்கள். பண்ணையார் வழி வந்தவர்களும், உள்ளூர் வாசிகள் யாவரும், பிற ஊர்களில் குடியேறி வசித்துவரும் சூரங்குடி மக்களும் ஒன்று சேர்ந்து திருக்கோவில் கைங்கரியங்கள் தவறாமல் நடக்கும்படி உதவி வருகிறார்கள்.குறிப்பாக தெய்வத்திரு. சு. ஆண்டியப்ப பிள்ளை அவர்கள் மகன் தெய்வத்திரு. ஆ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தன் தாத்தா வழி வந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களை, ஒரு பொறுப்புக் கழகம் அமைத்து காலை பூஜை வழிபாடுகளைச் செய்ய ஏற்பாடு செய்து வந்திருக்கிறார்கள். வரலாறு திருவிதாங்கூர் சமஸ்தானம் ஸ்வாதி திருநாள் மஹாராஜா ஆட்சி நடந்து கொண்டிருந்தத காலத்தில், அங்குள்ள திருக்கோவில்களில் தீப ஆராதனை, மற்றும் பூஜை செய்யும் பொறுப்புகளை, நம்பூதிரிமார் மற்றும் போற்றி என்று அழைக்கப்படும் பிராமண குடும்பத்தி லுள்ளவர்கள் செய்துவந்தனர். இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மத்திய திருவிதாங்கூரில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். சேப்பாடு என்ற ஊரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன் நம்பூதிரிப்பாடு என்றவர், இளம் வயதிலிருந்தே ஸ்வாமி ஐயப்பன் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார். அவரது இல்லத்தில் தனியாக ஒரு பூஜைமடம் கட்டி அதில் ஐயன் ஐயப்பன் விக்கிரகத்தை வைத்து பூஜை செய்து வந்தார். தகப்பனார் தேவதத்தன் நம்பூதிரிப்பாடு, மகனுக்கு பூஜா விதிகளைப் பற்றி நன்கு கற்பித்திருந்தார். அதிகாலையில் விதிப்படி உஷஸ்பூஜை நடக்கும். ஆண் பெண் இருபாலரும் சுத்தவிருத்தி கடைப்பிடிப்பதில் மிக்க கவனமுடன் இருந்து வந்திருக்கிறார்கள. இது இப்படியிருக்க, ஒரு தை மாதம் இரவில் ஈஸ்வரன் நம்பூதிரிக்கு ஸ்வாமி ஐயப்பன் கனவில் தோன்றி ஒரு ஐயப்ப விக்கிரகத்தைப் புதிதாக வாங்கப்பட்ட மண் கலசத்தினுள் வைத்து நீல நிறத்துணி வாங்கிக் கலசத்தைக்கட்டித் தலையில் வைத்து மனம் போன போக்கில் நடந்து செல்ல உத்திரவாயிற்று. மறுநாள் ஈஸ்வரன் நம்பூதிரி நடந்ததைத்தன் தந்தையிடம் கூறினான். இதைக் கேட்டதும், அடுத்த ஒரு நன்னாளில் ஒரு கணியான் ஜோசியர் ஒருவரிடம் பிரசன்னம் வைத்து பார்க்க ஏற்பாடு செய்தார். பிரசன்னம் முடிந்ததும், நான்குடி தெரிவதாகவும், இந்த ஊர் திருவிதாங்கூரில் இல்லை என்றும், சுவாமி ஐயப்பன் அங்கு செல்லவிரும்புவதாகவும் புலப்பட்டதாகக் கூறினான். இதைக் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும். மற்றவை ஈஸ்வர அனுக்கிரகம் போல் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேவதத்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'தேவ ஆக்ஞை என்ன செய்வது?' என்று வீட்டாரிடம் கேட்டார். ஒரு நல்ல நாள் பார்த்துத் தெய்வ சங்கல்பப்படி செய்வோம் எனத் தீர்மானித்தனர். பக்கத்து ஊரில் வார்ப்புகள் செய்யும் ஒருவரிடம் ஒரு நல்ல ஐயப்ப விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார். தேவதத்தன் ஒரு நல்ல மண்கலசத்தை ஒரு சுக்கிரப் பிரகாசத்தில் திங்கட்கிழமை புனர்பூச நட்சத்திரமும், சுக்லபக்ஷமும் கூடிய நன்னாளில் வாங்கி, சந்தனம் குங்கும் பொட்டிட்டு 11 நாட்கள் சுகந்தத் திரவியங்களால் தூபம் போட்டு, மந்திரங்களின் அதிர்வுகள் ஒலிக்க, சார்த்தல் முதலான சடங்குகள் செய்து, மாலை இட்டு, சரணங்கள் முழங்க பூஜை செய்து தயார் செய்து வைத்தார்கள். விக்கிரகம் தயார் செய்து கிடைத்ததும், அதற்கு விதிமுறைப்படி செய்ய வேண்டிய 41 நாள் நெல்கதிர், நெல், ஜலம் முதலியவற்றில் வைத்திருந்து உத்தராயண சிசிரரிதுவில், ஒரு நல்ல நாள் பார்த்து சுவாமியே சரணம் ஐயப்பா! பந்தளத்து ஐயனே சரணம் ஐயப்பா! முதலான கோஷங்கள் எழுப்பி வீட்டார் முன் நிலையில் பூஜை செய்து வைக்கப்பட்டது. தேவதத்தன் நம்பூதிரி விக்கிரகத்தை அஷ்ட அங்க நமஸ்காரம் செய்து மந்திரங்கள் சொல்லி மண் கலசத்தில் எடுத்து வைத்து, மறுபடியும் நமஸ்காரம் செய்து மந்திர உச்சாடனம் செய்து விட்டு, மகன் ஈஸ்வரனை அழைத்தார். ஈஸ்வரன் நம்பூதிரி கலசத்தின் முன்னும், தகப்பனார் முன்னும், வீட்டுப் பெரியோர்கள் முன்னும், கீழேவிழுந்து நமஸ்காரம் செய்து, உடம்பெல்லாம் உணச்சி பொங்கத் தலைகுனிந்து, தந்தையார் கையால் தன் தலையில் கலசத்தை ஒரு நீலநிறத் துணிகட்டி, அதன்மேல் வைக்க, அதைத் தாங்கிக் கொண்டு, ஐயப்பனை தியானித்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் வடமேற்கு திசை நோக்கி நடக்கத் தொடங்கினார். காலை முதல் மாலை வரை நடந்து, இடையிடையே இளைப்பாறி, அரிசி பிச்சை வாங்கிக்கஞ்சி வைத்துக் குடித்து, இப்படியாக நடந்தும், இளைப்பாறியும் நாட்கள் பல கடந்தன. இரவு நேரத்தில், சத்திரத்திலோ, பெரிய மரத்தின் கீழோ இளைப்பாறி, விக்கிரகத்தை தலையில் சுமந்து சென்றார். ஒரு நாள் அதிகாலை எழுந்தவுடன் தூரத்தில் ஒரு குளம் தென்பட்டது. இரவை ஒருகல்மண்டபத்தில் கழித்திருந்தார். ஈஸ்வரன் தலையில் மண் கலசத்தை வைத்துக்கொண்டு குளத்தை நோக்கி நடந்தார். குளக்கரையில் நீலநிறத்துணியில் பொதிந்து வைத்திருந்த மண் கலசத்தை வைத்து விட்டு, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, குளத்தில் இறங்கி நீராடினார். குளத்தில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு மனமுருகி மந்திர ஜெபம் செய்தார். சுவாமி ஐயப்பனை நினைத்து “இன்னும் இந்த சோதனை எத்தனை நாட்களுக்கோ என்று தெரியவில்லை" என்று ஏங்கினார். மூன்று முறை மூழ்கி எழுந்து கரை ஏறினார். உலர்ந்த வஸ்திரத்தை உடுத்தி, விபூதி அணிந்து, ஆசமனம் செய்து, உட்கார்ந்து நாமஜபம் செய்தார். பின் எழுந்து தியானித்து, நடையைத் தொடர்வதற்கு, மண்கலசத்தை எடுக்க முயன்றார். தன்னால் ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்தார். முடியவில்லை அவருக்கு உடனே இங்கு தான், தான் கொண்டு வந்த சுவாமி ஐயப்பனுக்கு இருப்பிடம் என்று தெரிந்து கொண்டார். தானாகவே ஒன்றும் செய்யக்கூடாது என்று நினைத்தார். உடனே ஊருக்குள் சென்றார். அங்குள்ள பெரியவர்களைப் பார்த்துத் தான் வந்த விபரத்தையும், எப்படிக் குளக்கரையில் ஐயப்பன் வீற்றிருக்கிறார் என்பதையும் விரிவாக எடுத்துச் சொன்னார். தம் ஊரில் பிரசன்னம் பார்த்த விபரத்தையும் நான்குடி என்ற எழுத்துக்கள் தெரிய வந்ததையும் கூறினார். நான்குடி, ஆரங்குடியாய் இருக்கலாமென்றும் சொன்னார் ஊர்மக்கள் அவரைப் பண்ணையார் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஊர்ப் பெரியவர்களைப் பண்ணையார் அழைக்கச் சொல்லி எல்லோருமாக யோசனை செய்தார்கள். பண்ணையார் தெய்வத்திரு. திரு. ஆ. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் ஊர் மக்களிடம் தனக்குச் சொந்தமான இடம் குளத்தருகே உள்ளது. கிட்டத்தட்ட 60 சென்டுக்குமேல் இடம் வரும். உங்களுக்கெல்லாம் சம்மதமானால், அந்த இடத்தில் நாம் ஒரு கோவில் அமைக்கலாம் என்றார்கள். இதற்கு ஊர் மக்கள் ஏகமனதாகச் சம்மதம் சொன்னார்கள். உடனே பண்ணையார் தெய்வத்திரு திரு. ஆ. சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் குளக்கரைக்கு சென்றார்கள். ஈஸ்வரன் நம்பூதிரி, சுவாமி ஐயப்பனை மனதில் நினைத்து, எல்லோரும் சுற்றிலும் அமர்ந்திருக்க ஜபம் செய்யலானார். ஜபம் செய்து முடித்ததும், எல்லோருடைய அனுமதிகேட்டுச் சரண கோஷங்கள் முழங்க ஈஸ்வரன் கலசத்தை எடுக்க முயன்றதும், பிரயாசை இன்றி எடுக்க முடிந்தது. கிழே எடுத்துச் சென்று, முன்னால் நன்றாக சுத்தம் செய்து, சாஸ்திர சம்பிரதாயப்படி தேர்வு செய்யப்பட்ட இடத்தில், கோலங்கள் இட்டு, பூவினால் சக்கரம் வரைந்து கலசத்தைப் பயபக்தியுடன் கீழே வைத்து, அவர் தன் கையாலேயே உடைத்தார். பின் பெரிய தாம்பாளம் ஒன்றில் வைத்து, அஷ்டா அபிஷேகம் செய்து, சக்கரம் வரைந்து நிலத்தை தயார் செய்திருந்த இடத்தில் மந்திரங்கள் சொல்லி, சதுரமாக சமநிலைப்படுத்தினார். அந்த இடத்தில் பால், பன்னீர், இளநீர், மஞ்சள் நீர் முதலான திரவங்களால் பூமி சுத்தி செய்து, எல்லோரிடமும் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த இடத்தில் செப்புத் தகடுகள், பண்ணையார், ஊர்மக்கள் கொடுத்த பொற்காசுகள் எல்லாம் முறையே இட்டு மருந்து வைத்து, சுவாமி ஐயப்பன் விக்கிரகத்தை முறைப்படிப் பிரதிஷ்டை செய்தார். இப்பிரதிஷ்டை நடந்தது கொல்லம் 1008ஆம் ஆண்டு, நந்தன வருடம், பங்குனி மாதம், பௌர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் கூடிய நன்னாளாகிய வெள்ளிக்கிழமை (16.03.1842) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் ஆகும். நமது திருக்கோவிலைப் பற்றி கிடைத்த சுருக்கமான வரலாற்றை மேலே தந்துள்ளோம். மண்கலமுடையார் என்பது நாளடைவில் பேச்சு வழக்கில் மங்கலமுடையார் என்றே மருவி விட்டது. நமது ஸ்ரீலஸ்ரீ மங்கலமுடையார் திருக் கோவில் வரலாறு பற்றிய விபரங்களைப் பெரியவர்கள், ஊரிலுள்ள கோவில் பற்றி தெரிந்த சான்றோர்கள், அர்ச்சகக் குடும்பங்கள், இதற்கு எல்லாம் மேலாக ஊர்ப்பெரியவர், பண்ணையார் தெய்வத்திரு. ஆ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் குமாரர் தெய்வத்திரு. சு. ஆண்டியப்ப பிள்ளையின் மூத்த மகளும், லேட் திரு. டி.கே. பழனியப்பன் IAS அவர்கள் மனைவியுமான (கிட்டத்தட்ட 90 வயதான மூதாட்டி) திருமதி. ப. சேதுலெட்சுமி அம்மாள் அவர்கள் மகன் திரு. பி.கே. பெருமாள், வழி எழுதியனுப்பிய விவரமான தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் மேலும் திருக்கோவில் வரலாற்றை செந்தமிழ் சிவநெறிச் செல்வர் உயர்திரு. வை. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் பார்வைக்கு கொண்டு சரிபார்க்கப்பட்டுள்ளது. தொகுத்து எழுதியவர் வரப்பட்டு தெய்வத்திரு. சு. ஆண்டியப்ப பிள்ளை தம்பி சு. பத்மனாபபிள்ளை மகன் ப. நெல்லை நாயகம் பிள்ளை 249, என்.ஜி.ஓ. புதுக்காலனி, ஜவஹர்நகர், திருநெல்வேலி. தன் திருவடியில் சரண் அடைந்தவர்கள் எந்தப் பலனை விரும்புகிறார்களோ அதை அளிப்பவர். கரை இல்லாத கருணைக்கடலுக்குப் பூரண சந்திரன் போன்றவர் ஈஸ்வரன்-கேசவன் ஆகிய இருவருடைய அம்சங்களால் தோன்றியவர் (ஹரிஹரபுத்திரன்) உலகிற்கு ஒரே தலைவராய் திகழ்பவர். அப்படிப்பட்ட ஸ்ரீ சாஸ்தாவை (ஐயப்பனை) எல்லா விதமான நலங்களும் நல்குமாறு தினந்தோறும் வணங்குகின்றேன்.